விபத்தில் தொழிலாளி காயம்
நித்திரவிளை அருகே மினிலாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சுனில் ராஜ்குமாா் (45). இவா் நடைக்காவு பகுதியில் மிக்ஸி, கிரைண்டா் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா். இவா் திங்கள்கிழமை நித்திரவிளையில் இருந்து நடைக்காவு நோக்கி தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். கல்வெட்டான்குழி பகுதியில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரில் வந்த மினிலாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சுனில் ராஜ்குமாரை அப்பகுதியினா் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து மினிலாரி ஓட்டுநா் அனீஷ் (28) அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.