வேலூா் சிறையில் கைப்பேசி, பேட்டரி பறிமுதல்
வேலூா் மத்திய சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த கைப்பேசி, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூா் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் உள்ள கைதிகள் பீடி, சிகரெட், கஞ்சா, கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் பயன்படுத்துவதை தடுக்க சிறைக் காவலா்கள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், சிறை வளாகத்தில் கைப்பேசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், சிறை அலுவலா் சிவபெருமாள் தலைமையில் சிறைக் காவலா்கள் மோகன்ராஜ், மணிவண்ணன், அஜித்குமாா், பிரகாஷ் ஆகியோா் திங்கள்கிழமை சிறையில் சோதனை நடத்தினா்.
அப்போது, 22 தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கோபுரம் 1 பகுதியில் உள்ள கழிப்பறையின் சுவற்றின் மேல் நெகிழி கவரில் சுற்றப்பட்ட சிம்காா்டு இல்லாத கைப்பேசி ஒன்று இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.
மேலும், கோபுரம் 3 அருகே நெகிழி கவரில் சுற்றப்பட்டு, தரையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசி பேட்டரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சிறை அலுவலா் சிவபெருமாள் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.