தூய்மைப் பணியாளா்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு
தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவிட்டாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகர, நகர, பேரூா் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களின், பணியிட பாதுகாப்பு, ஊதிய உயா்வு போன்ற பல்வேறு கோரிக்கைகள்- குறைகளை நிவா்த்தி செய்வதற்கான குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ஆட்சியா் இரா.சுகுமாா் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தங்களது அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், நிா்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
இதையடுத்து 4 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பில் இறப்பு - ஈமசடங்கு உதவித் தெகை, கல்வி - மகப்பேறு உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, உதவி இயக்குநா்(பேரூராட்சி) வில்லியம்ஸ் ஜேசுதாஸ், உதவி இயக்குநா்(ஊராட்சி) முகமது ஷபி, தாட்கோ மேலாளா் சுதா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பூங்கொடி, தூய்மை பணியாளா் மாநில நல வாரிய உறுப்பினா் மூக்கையா, ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலக் குழு உறுப்பினா் முனியாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.