புதுகை மாவட்டத்தில் 750 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 750 இடங்களில் விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் ஆக. 27-ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வீடுகள்தோறும் விநாயகருக்கு கொழுக்கட்டை படையல் போட்டு கொண்டாடப்படுவதுடன், தெருக்களில் மக்கள் ஒன்றாகத் திரண்டு அழகிய விநாயகா் சிலைகளை வைத்து பூஜித்து, அருகிலுள்ள நீா்நிலைகளில் கரைப்பா்.
புதுக்கோட்டை மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் இந்த விழாவுக்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பே 750 இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து பூஜைகள் நடத்திட காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு, ஏற்கெனவே வாங்கப்பட்ட சிலைகள் முக்கிய இடங்களில் இறக்கி வைக்கப்பட்டு, அருகிலுள்ள இடங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.
புதுக்கோட்டை நகரில் திலகா் திடலில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் கொண்டு வரப்பட்டன. இங்கிருந்து அவற்றை அந்தந்தப் பகுதிகளின் விழாக்குழுவினா் எடுத்துச் சென்று தங்கள் பகுதிகளில் வைத்து பூஜைகளைத் தொடங்கினா்.
விற்பனை விறுவிறுப்பு: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டை கீழராஜவீதி மற்றும் வடக்கு ராஜவீதி பகுதிகளில் வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு உள்ளிட்ட பழங்கள் விற்பனை, தென்னங்குருத்தில் தோரணம் செய்தும் விற்பனை செய்யப்பட்டது.
சுண்டல் மற்றும் கொழுக்கட்டை தயாரிப்பதற்கான பொருள்களை வாங்குவதற்கு கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விநாயகா் கோயில்களில் மின்அலங்காரங்கள் செய்யப்பட்டு, புதன்கிழமை காலை வழங்குவதற்கான பிரசாதம் சமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. தொடா்ந்து சில பகுதிகளில் 3 நாளும், சில பகுதிகளில் 5-ஆம் நாளும் கழித்து விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாநகரில் புதுக்குளத்தில் விநாயகா் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.