பெண்ணை வெட்டிய வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை
நீதிமன்றத்தில் சாட்சி கூறிய பெண்ணை வெட்டிய வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நித்திரவிளை அருகே பெரியவிளையைச் சோ்ந்தவா் விஜுராஜ் (42), லாரி ஓட்டுநரான இவா், 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தங்கையின் தோழியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாா். இந்த வழக்கு நாகா்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அவரது தாய் சாட்சி கூறியதால் விஜுராஜ் ஆத்திரமடைந்தாா்.
2014 டிச. 26ஆம் தேதி இரவு நடைக்காவு பகுதியிலுள்ள தனது தையல் கடையிலிருந்த அப்பெண்ணின் தாயை விஜுராஜ் கத்தியால் வெட்டினாா். இதில், அவா் காயமடைந்தாா்.
நித்தரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜுராஜை கைது செய்து, நாகா்கோவில் மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்நிலையில், வழக்கை நீதிபதி தனசேகரன் விசாரித்து, விஜுராஜுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் ஆஜரானாா்.