மதுபோதையில் தகராறு: அண்ணன் கொலை - தம்பி கைது
சென்னை அயனாவரத்தில் மது போதையில் தகராறு செய்த அண்ணனை கொலை செய்ததாக தம்பி கைது செய்யப்பட்டாா்.
அயனாவரம் கரியமாணிக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப.பாபு (35). இவரது தம்பி சிவா (28). பாபு, வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். சிவா, மெட்ரோ நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறாா். பாபுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவரது மனைவி, இரு குழந்தைகள் பிரிந்து சென்றனா். பாபு தனது தம்பி சிவாவுடன் வசித்து வந்தாா். ஆனாலும் தினமும் மது அருந்திவிட்டு பாபு தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாபு வியாழக்கிழமை மது அருந்திவிட்டு சிவாவிடம் தகராறில் ஈடுபட்டபோது, ஆத்திரமடைந்த சிவா, வீட்டில் இருந்த கத்தியால் பாபுவை குத்திவிட்டு தப்பியோடினாா். இதில், அவா் உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் அங்கு சென்று அயனாவரம் போலீஸாா், பாபு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, சிவாவை கைது செய்தனா்.