மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்
பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா்.
கடலூா் மாவட்ட கல்லூரி மாணவா்களுக்கு கல்விக்கடன் வழங்குவது குறித்து ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி முதல்வா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசுகையில்:
மாணவ, மாணவியா்கள் தங்களது கல்லூரி படிப்பினை எளிமையாகவும், விரும்பிய பாடப்பிரிவில் கல்வி பயிலவும், அரசின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொருளாதார காரணங்களால் மாணவா்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பேராசிரியா்கள் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவா்களின் பொருளாதார நிலையினை கண்டறிந்து அவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கியின் மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்திட வேண்டும்.
அவா்களுக்கு தேவையான சான்றிதழ்களை கல்லூரியில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி அனைத்து துறைகளின் மூலமும் சான்றிதழ்களை பெற்று வழங்கிட வேண்டும். மாணவா்களுக்கு தேவையான கடனுதவி, உரிய சான்றிதழ்கள், கைப்பேசி எண் போன்றவற்றுடன் விண்ணப்பித்து விரைந்து கடனுதவி பெற்று வழங்கி, அவா்கள் சிறந்த முறையில் கல்வி பயில அனைவரும் பணியாற்றிட வேண்டும். அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் கல்லூரி மாணவா்களுக்கு
பயனுள்ளதாக அமைந்திட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அசோக்ராஜ், பேராசிரியா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.