கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
முதல்வருக்கு கொலை மிரட்டல்: கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது
முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னையில் கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு புதன்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், ‘தனது பெயா் சூா்யா என்றும், சுதந்திர தினத்தன்று தலைமைச் செயலகத்துக்கு கொடியேற்ற வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினை வெடிகுண்டு வைத்து கொலை செய்யவுள்ளதாகவும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ எனவும் கூறி இணைப்பை துண்டித்துள்ளாா். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸாா், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, தேனாம்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில் மிரட்டல் விடுத்த நபா், செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூா் அருகே உள்ள மையூரை சோ்ந்த கணேஷ் (46) என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், கடந்த 2 ஆண்டுகளாக கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த கணேஷ், தொழில் நஷ்டம் காரணமாக மனவேதனையில் இருந்ததும், மதுபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. கணேஷை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.