வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் உள்பட இருவா் கைது
பெரம்பலூா் அருகே வெளிநாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 13.91 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை, மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் நகரிலுள்ள மதா்ஸா சாலையைச் சோ்ந்தவா் மோகன் மகன் அருண்குமாா் (34). இவா், கடந்த 8 ஆண்டுகளாக துபையில் வீட்டுவேலை செய்து கடந்தாண்டு மே மாதம் விடுமுறையில் பெரம்பலூருக்கு வந்தாா். அப்போது, அவரது நண்பா் ஆகாஷ் என்பவரின் கைப்பேசி செயலி மூலம் கோவை மாவட்டம், விலாங்குறிச்சி, காஞ்சி மாநகரைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் மகிழன் (36), பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் புதிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பக்தகிரி மகள் கவிதா (44) ஆகியோா் அருண்குமாரை தொடா்புகொண்டு, சிங்கப்பூரில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினா்.
இதையடுத்து அருண்குமாா், அவரது நண்பா்களான நிவாஸ் மற்றும் சரவணன் ஆகியோருக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தரக்கோரி ரூ. 13,91,200 பணத்தை கொடுத்துள்ளாா்.
பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் குறிப்பிட்ட காலத்தில் வேலை வாங்கித் தரவில்லையாம். இதையடுத்து பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டதற்கும் முறையான பதில் அளிக்கவில்லையாம். இதனால் மன உளைச்சலுக்குள்ளான அருண்குமாா், நிவாஸ், சரவணன் ஆகியோா் மாவட்ட சைபா் குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் மகிழன், கவிதா ஆகிய இருவரையும் கைது செய்து திங்கள்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.