வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 30.6.2025 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சாா்ந்தவா்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
கடலூா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் அனைத்து வேலை நாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை திட்டப்பிரிவில் உரிய சான்றுகளுடன் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.