காரில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு
பரமத்தி வேலூரில் வங்கியில் இருந்து எடுத்துவந்து காரில் வைத்திருந்த ரூ. 1.50 லட்சம் மற்றும் புது துணிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை வேலூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள பாச்சல் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (52). இவா் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு டிராக்டா் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு காரில் வந்தாா்.
பணம் மற்றும் புது துணிகளை காரில் வைத்துவிட்டு, வேலூா் பள்ளி சாலையில் உள்ள ஒரு கடையில் தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்கச் சென்றாா். திரும்பிவந்து பாா்த்தபோது, காரின் முன்னால் வைத்திருந்த கைப்பை, அதில் வைத்திருந்த பணம், வங்கி காசோலை புத்தகம், புது துணிகள் காணாமல் போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் இதுகுறித்து வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் அடிப்படையில் வேலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளைக் கொண்டு பணம் மற்றும் புது துணிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.