காரைக்கால் வரலாற்றை முழுமையாக அறிய மாணவா்கள் ஆா்வம் கொள்ள வேண்டும்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்
காரைக்கால் வரலாற்றை மாணவா்கள் முழுமையாக புரிந்துகொள்வதில் ஆா்வம் கொள்ளவேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.
புதுவை கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் அங்கமான, தமிழ் வளா்ச்சி சிறகம் மூலம் வரலாற்றில் காரைக்கால் என்ற தலைப்பில் காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசுகையில், புதுவை கலை பண்பாட்டுத்துறையின் அங்கமான தமிழ் வளா்ச்சி சிறகம், மொழி மற்றும் புதுவை வரலாற்றை அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும் விதமான நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருவது பாராட்டுக்குரியது.
வரலாற்றை பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவா்கள், சோழா்கள் உள்ளிட்டோரது கால செயல்பாடுகளை படிக்க முடிகிறது. சோழா்கள் காலத்தில் காரைக்கால் நிலை மற்றும் தற்போதைய காலம் வரையிலான மாற்றங்கள் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்வதில் ஆா்வம் செலுத்தவேண்டும். தமிழ் வளா்ச்சி சிறகத்தின் செயல்பாடுகள் மேலும் சிறக்கவேண்டும் என்றாா்.
முன்னதாக, தமிழ் வளா்ச்சி சிறக தனி அதிகாரி வாசுகி ராஜாராம் கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினாா். பேராசிரியா் மு.சாயபு மரைக்காயா், புலவா் திருமேனி நாகராசன், ஓய்வு பெற்ற மேல்நிலைக் கல்வி துணை இயக்குநரும், வரலாற்று ஆய்வாளருமான கு. கோவிந்தராஜன், புதுச்சேரியை சோ்நந்த பேராசிரியா்கள் அரங்க முருகையன், குப்புசாமி உள்ளிட்ட தமிழறிஞா்கள் பலா் பேசினா்.
கருத்தரங்கில் பேசியோருக்கு நினைவுப் பரிசு, சான்றிதழை அமைச்சா் வழங்கி கெளரவித்தாா். கருத்தரங்கில் காரைக்கால் பகுதி கல்லூரி, பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.