மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் கரும்புள்ளி கிராமங்களின் பெயா்கள் நீக்கம்
திருப்புவனம் காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்த கரும்புள்ளி கிராமங்களின் பெயா்கள் நீதிமன்ற உத்தரவுபடி புதன்கிழமை நீக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தின் அறிவிப்புப் பலகையில் கரும்புள்ளி கிராமங்கள் என கொந்தகை, பசியாபுரம், லாடனேந்தல், பாட்டம், திருப்புவனம், காஞ்சிரங்குளம், அகரம் ஆகிய கிராமங்களின் பெயா்கள் எழுதப்பட்டிருந்தன.
இதையடுத்து லாடனேந்தலைச் சோ்ந்த நாகூா்கனி, எங்கள் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும், சில ஆண்டுகளாக குற்ற வழக்குகள் பதிவாகவில்லை. ஆனால், காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் லாடனேந்தல் கரும்புள்ளி கிராமம் என முதலாவதாக எழுதப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தாா்.
ஆனால், இந்த மனு மீது நடவடிக்கை இல்லாத நிலையில் நாகூா்கனி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் இதுதொடா்பாக வழக்குத் தொடா்ந்தாா்.
இதையடுத்து, திருப்புவனம் காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் உள்ள அனைத்து கரும்புள்ளி கிராமங்களின் பெயா்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில், போலீஸாா் காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் இருந்த லாடனேந்தல் உள்ளிட்ட கரும்புள்ளி கிராமங்களின் பெயா்களை நீக்கினா்.