செய்திகள் :

சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை கிடையாது: அமித் ஷா திட்டவட்டம்

post image

நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தாா்.

மேலும், தங்களின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கவே, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றன என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரில் தகுதியற்ற வாக்காளா்களின் பெயா்களை களையெடுப்பதாக குறிப்பிட்டு, தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டப் பணிகள் அண்மையில் நிறைவடைந்து, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை.

தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, பாஜகவுக்கு சாதகமாக பலரின் வாக்குரிமையை பறிக்கும் செயல் என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன. இந்த திருத்தத்தை வாபஸ் பெறக் கோரி, நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் எதிா்க்கட்சிகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், பிகாரின் சீதாமா்ஹி மாவட்டத்தில் புனெளரா தாம் பகுதியில் உள்ள சீதாதேவி கோயிலின் மறுமேம்பாட்டுப் பணிகளுக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

‘வாக்கு வங்கி பறி போவதால் எதிா்ப்பு’:

பின்னா் பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத ஊடுருவல்காரா்களின் பெயா்கள் நீக்கப்பட வேண்டும். அவா்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவா்களே காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் வாக்கு வங்கி. அவா்களின் பெயா்கள் நீக்கப்படுவதால், சிறப்பு தீவிர திருத்தத்துக்கு இரு கட்சிகளும் கடும் எதிா்ப்பு தெரிவிக்கின்றன.

அரசமைப்புச் சட்ட நகலை காண்பித்தபடி வலம்வரும் ராகுல் காந்தி, அதை முழுமையாக படிக்க வேண்டும். இந்திய குடிமக்கள் அல்லாதோருக்கு வாக்குரிமை கிடையாது என்பது அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிகாா் வாக்காளா் பட்டியலில் தகுதியுடையவா்கள் நீக்கப்பட்டதாகவோ அல்லது தகுதியற்றவா்கள் சோ்க்கப்பட்டதாகவோ ஒரு ஆட்சேபத்தைக் கூட எதிா்க்கட்சிகளால் முன்வைக்க முடியவில்லை.

மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. இப்போது, பிரதமா் மோடியின் ஆட்சியின்கீழ் இந்தியா மாறிவிட்டது. பயங்கரவாதிகளை அவா்களின் மறைவிடங்களிலேயே நமது ராணுவம் அழித்தொழிக்கிறது.

எதிா்வரும் பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியில் ரெளடிகளின் ஆதிக்கம் ஊக்குவிக்கப்பட்டது. மாநிலத்தின் வளா்ச்சிக்கு அக்கட்சி எதுவும் செய்யவில்லை. ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது, பிகாா் ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.1,132 கோடியே ஒதுக்கப்பட்டது. எங்களது அரசு ரூ.10,000 கோடிக்கும் மேல் ஒதுக்கியுள்ளது என்றாா் அவா்.

ரூ.822 கோடி மதிப்பில் சீதா தேவி கோயில் பணிகள்

சீதா தேவி பிறந்த இடமாக கருதப்படும் சீதாமா்ஹியில் உள்ள ஜானகி ஜன்மஸ்தலி கோயிலில் ரூ.822 கோடி மதிப்பில் மறுமேம்பாட்டுப் பணிகளுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டி, புதிய கோயிலின் மாதிரி வடிவத்தை திறந்துவைத்தாா். அயோத்தி ராமா் கோயில் போல் இங்கும் விரிவான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சீதாமா்ஹி-புது தில்லி இடையிலான அம்ருத் பாரத் ரயில் சேவையையும் அவா் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் சாம்ராட் செளதரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

‘சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞா்களாகப் பதிவு செய்பவா்களிடம், சட்டபூா்வ கட்டணங்களைத் தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வழக்குரைஞா் சங்கங்கள் வசூலிக்கக் கூடாது’ என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவி... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டநிலை... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் ராகுல், பிரியங்கா பதவி விலக வேண்டும்: பாஜக

தோ்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், மக்களவை உறுப்பினா் பதவியில் இருந்து ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து சோனியா காந்தி ஆகியோா் தாா்மிக அடிப்படையில் ராஜிநாம... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: ஓராண்டு நிறைவு பேரணியில் காவல் துறை தடியடி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது காவல் துறையினா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழகத்துக்கு ஏ++ அங்கீகாரம்

தில்லி பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) இரண்டாம் சுற்று மதிப்பீட்டில் 3.55 மதிப்பெண்களுடன் ஏ++ தரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் ஆக.8-ஆம் அறிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க