சிவாலயங்களில் சனிப் பிரதோஷம்
பிரதோஷத்தையொட்டி, சிவாலயங்களில் நந்தீஸ்வரா், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளி நாதா் ஆலயத்தில் நந்தீஸ்வரருக்கும், மூலவா் லிங்கத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம், நெய், கரும்புச் சாறு, இளநீா், தேன், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, புஷ்ப அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து, உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா். இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்தில் நந்தீஸ்வரருக்கும், மூலவருக்கும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் ஆலயத்தில் அபிஷேக, ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கல்வெட்டுமேடு கல்வெட்டுநாதா் ஆலயத்தில் பெண்கள் நெய் தீபமேற்றி வழிபாடு செய்தனா்.
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவா் சோமநாதா் சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திருப்புவனம் ஸ்ரீ சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் சுவாமிக்கும், நந்திக்கும் அபிஷேகம் நடத்தி, அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா் சிவன் கோயில்களிலும், இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் சுவாமி கோயில், குறிச்சி ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.