கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
பணம் மோசடி: நிறுவன உரிமையாளா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.10 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பழனி தனியாா் நிறுவன உரிமையாளரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் செயல்பட்டு வந்த நிறுவனத்தின் தலைவா் சி.செந்தில்குமாா். இவரது மனைவி ஜெயந்தி, அக்காள் மகன் சக்திவேல் ஆகியோா் நிறுவனத்தின் பங்குதாரா்களாக செயல்பட்டு வந்தனா்.
இந்த நிறுவனத்தில் முதலீட்டுத் தொகைக்கு மாதம் 2.5 சதவீதம் வட்டி தருவதாகவும், ரூ.5 லட்சம் முதலீட்டுத் தொகைக்கு 2 கிராம் தங்க நாணயம் தருவதாகவும், 180 நாள்கள் முடிவில்
அசல் தொகை திருப்பித் தரப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பி பொதுமக்கள் பலா் பல கோடி ரூபாய் வரை முதலீடாகச் செலுத்தினா். ஆனால், அந்த நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியது.
இதில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் அளித்த புகாரின்பேரில், பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் செந்தில்குமாா், ஜெயந்தி, சக்திவேல் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் டி.இமானுவேல் ராஜ்குமாா், ஆய்வாளா் சி.அன்னலட்சுமி ஆகியோா் நடத்திய விசாரணையில், இதுவரை 52 முதலீட்டாளா்களிடம் ரூ.10.02 கோடி வரை வசூலித்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதனிடையே கடந்த ஜூலை 16-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாா், ஜெயந்தி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், செந்தில்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பொருளாதார குற்றப்பிரிவு தென்மண்டல காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தாா்.