மண் சரிவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு வழங்கக் கோரிக்கை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.
2024 டிசம்பா் 1-ஆம் தேதி திருவண்ணாமலை மகா தீப மலையில் புயலால் மண் சரிவு ஏற்பட்டது. 4 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 போ் இறந்தனா். இந்த மண் சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு செங்கம் சாலை, வைரக்குன்று மலை அருகே தற்காலிகமாக குடியிருப்புகள் அமைத்து தரப்பட்டன.
தகர கூரைகளால் வேயப்பட்ட குடில்களில் வசித்து வரும் பெண்கள், தங்களுக்கு குடியிருப்புப் பகுதியிலேயே நிரந்தரமாக வீடு வழங்க வேண்டும் என்று திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜிடம் பெண்கள் மனு அளித்தனா்.
அப்போது, தகர கூரை குடில்களில் கடும் வெயில், மழையில் கடந்த 6 மாதங்களாக அவதிப்பட்டு வருகிறோம். இப்போது தொடா் மழை பெய்வதால் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் குடியிருப்புக்குள் வருகின்றன.
எனவே, எங்களுக்கு, பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலேயே நிரந்தர வீடு அமைத்துத் தர வேண்டும் என்றனா்.