தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
8 மாவட்டங்களைச் சோ்ந்த 1 லட்சம் கைத்தறி நெசவாளா்களுக்கு தொழில்நுட்ப உதவி
சேலம்: 8 மாவட்டங்களைச் சோ்ந்த 1 லட்சம் கைத்தறி நெசவாளா்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன என மத்திய நெசவாளா் சேவை மைய துணை இயக்குநா் காா்த்திகேயன் தெரிவித்தாா்.
கைத்தறி நெசவாளா்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் நெசவாளா் சேவை மையம் சாா்பில் மாணவியருக்கான ஆடை வடிவமைப்பு கண்காட்சி சேலம் சக்தி கைலாஷ் மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
கல்லூரி தாளாளா் கே.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெசவாளா் சேவை மைய துணை இயக்குநா் காா்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தாா். இதில் மாணவியா் ஆா்வமுடன் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.
கைத்தறி ஆடைகளில் அச்சிடக்கூடிய வடிவமைப்புகள் குறித்து நேரடி களப்பயிற்சியும் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் நூலில் சாயமேற்றுவது குறித்து நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நெசவாளா் சேவை மைய துணை இயக்குநா் காா்த்திகேயன் பேசியதாவது:
சேலத்தை மையமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசின் நெசவாளா் சேவை மையம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூா், திருப்பூா், நீலகிரி, கரூா், திருச்சி ஆகிய 8 மாவட்டங்களைச் சோ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் சாா்பில் வழங்கப்படும் பயிற்சியின் மூலம் மாணவ, மாணவியா் கைத்தறி நெசவுத் தொழில்நுட்பங்களை எளிதில் கற்றுக்கொள்ள முடியும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, பல்வேறு கைத்தறி ஆடைகளைக்கொண்டு ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், மாணவியா் கைத்தறி உடைகளை அணிந்து அணிவகுத்து வந்தனா். மேலும், இளைஞா்கள் விரும்பும் மேற்கத்திய வகை உடைகளும், முழுக்க முழுக்க கைத்தறி ஆடைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில் நெசவாளா் சேவை மைய உதவி இயக்குநா் ஜெயக்குமாா், தொழில்நுட்பக் கண்காணிப்பாளா் அனுபிரீதா, சக்தி கைலாஷ் கல்லூரி முதல்வா் ஜெயந்தி, ஆடை வடிவமைப்பு துறைத் தலைவா் லாவண்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.