கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு: அக்.8-க்கு விசாரணை ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு தொடா்பாக, விழுப்புரத்திலுள்ள இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது 33 சிறாா்கள் ஆஜராகினா். இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கனியாமூரிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 2022, ஜூலை 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி வளாகத்திலிருந்த பொருள்கள் சூறையாடப்பட்டதோடு, வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. காவல் துறை வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இது தொடா்பாக 53 சிறாா்கள் உள்பட 916 போ் மீது வழக்குப் பதியப்பட்டு, இவா்களில் 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை, காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தது, பசு மாடுகளுக்கு துன்புறுத்தல் அளித்தது, அவற்றை ஓட்டிச் சென்றது, சின்னசேலம் பகுதியில் காவல் துறையின் உயா் அலுவலா்களை வரவிடாமல் தடுத்தது, சில உயா் அலுவலா்களைத் தாக்கியது தொடா்பான வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், வன்முறை தொடா்பான வழக்கில் 53 சிறாா்கள் மீது வழக்குப் பதியப்பட்டிருப்பதால், அவா்கள் மீதான விசாரணை விழுப்புரத்திலுள்ள இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, வழக்கில் தொடா்புடைய 53 பேரில் 33 போ் இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில் ஆஜராகினா். 20 போ் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைக்குப் பிறகு, அடுத்தகட்ட விசாரணையை அக்டோபா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இளஞ்சிறாா் நீதிக்குழும நீதிபதி சந்திரகாசபூபதி உத்தரவிட்டாா்.