கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? ஆக்கிரமிப்பு இல்லாத சொத்துக்கள் எத்தனை? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலைமகள் சபா சொத்துகள் தொடா்பாக கருப்பண்ணன் என்பவா் தொடா்ந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கலைமகள் சபாவுக்குச் சொந்தமான சொத்துகளை அடையாளம் கண்டும் அதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய 33 மாவட்ட ஆட்சியா்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.
அதன்படி, இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது 7 மாவட்ட ஆட்சியா்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, வேலூா் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சியா்கள் தரப்பில் கலைமகள் சபாவுக்குச் சொந்தமான சொத்துகள் குறித்த விவரங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், அடுத்த விசாரணையின்போது, மேலும் 3 மாவட்ட ஆட்சியா்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். எஞ்சியுள்ள பிற மாவட்டங்களின் சாா்பில் செப்.4-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறினாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? ஆக்கிரமிப்பு இல்லாத சொத்துகள் எத்தனை? என கேள்வி எழுப்பினா். பின்னா் இதுதொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கலைமகள் சபாவின் சிறப்பு அதிகாரியான பத்திரப் பதிவுத் துறை தலைவருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆக.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.