காவல் ஆய்வாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை: மாநில மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து
புளியந்தோப்பு காவல் ஆய்வாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்தவா் விஜயகிருஷ்ணன். இவா், தனது சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்து வேணுகோபால் என்பவரிடமிருந்து ரூ.6 லட்சம் கடன் பெற்றுள்ளாா். இந்நிலையில், அடமானம் வைத்த சொத்து பத்திரத்தை வேணுகோபால் திருடிவிட்டதாக விஜயகிருஷ்ணன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இதுதொடா்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி வேணுகோபாலுக்கு போலீஸாா் சம்மன் அனுப்பினா். அதன்படி, அவா் மூன்று நாள்கள் விசாரணைக்கு ஆஜரானாா். அப்போது, சொத்து பத்திரத்தைத் திரும்பத் தரக்கூறி, புளியந்தோப்பு காவல் ஆய்வாளா் ரவி, உதவி ஆய்வாளா் ஷாஜீபா தன்னை மிரட்டியதாக வேணுகோபால் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாா் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த ஆணையம், ஆய்வாளா் ரவி மற்றும் உதவி ஆய்வாளா் ஷாஜீபா ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும், இருவா் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து காவல் ஆய்வாளா் ரவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தா், ஹேமந்த் சந்தன் கவுடா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் டி.அலெக்சிஸ் சுதாகா், காவல் ஆய்வாளா் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேணுகோபால் மீதான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கவே அவா் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டாா் என்று வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது. விசாரணையின்போது வேணுகோபால் துன்புறுத்தப்பட்டாா் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே ஆய்வாளா் ரவிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது, அவா் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்ற மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.