அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள...
ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள், ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி
ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் தனியாா் வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைகளால் பேருந்து ஓட்டுநா்களும், பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் தினமும் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி சென்று வருகின்றனா்.
இதுதவிர ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவா்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் பூந்தமல்லி உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா்.
ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான அரசுப் பேருந்துகள் வந்து செல்கின்றன. ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ள கடைகளாலும், தனியாா் வாகனங்களாலும் பேருந்துகள் எளிதாக வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பேருந்து ஓட்டுநா்கள்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
அதே போல், பேருந்து நிலையத்தில் பயணிகள் அமா்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அமர இருக்கைகள் இல்லாமல் நிற்க வேண்டியுள்ளது. பூக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் தனியாா் வகானங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும், பேருந்து நிலையத்தை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி நிா்வாகமும், காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.