போனி கபூா், அவரது இரு மகள்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவா் போனி கபூா் உள்ளிட்டோா் பெயருக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் புழுதிவாக்கம் பாலாஜி நகரைச் சோ்ந்த எம்.சிவகாமி என்பவா் தாக்கல் செய்த மனுவில், சோழிங்கநல்லூா் பகுதியில் எங்களுக்குச் சொந்தமான 2.70 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எங்களுக்குத் தெரியாமல், எங்களது குடும்ப வாரிசுகள் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு விற்பனை செய்துள்ளனா்.
தற்போது அந்த நிலத்துக்கு ஸ்ரீதேவியின் கணவா் போனி கபூா் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூா் மற்றும் குஷி கபூா் ஆகியோரது பெயா்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. எனவே, அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்குச் சொந்தமான அந்த நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் கடந்த ஆண்டு செப்.5-ஆம் தேதி கொடுத்த மனுவை சென்னை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி பரிசீலித்து 12 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.